கிளிப்பிள்ளை...

மாணவன்...

மதிப்பெண்களுக்காக

பாடப் புத்தகத்தின்

வரிகளை

செயற்கையாய் மூளைக்குள்

சேமிக்கும் இயந்திரம்



எல்லாக் கோட்பாடுகளையும்

படித்தோம்...

பரீட்சை எழுதினோம்...


எழுதுகிறோம்...

எழுதியவன்

எழுதியதையே....


ஒரு கோட்பாட்டையாவது

ஒப்புக்காகவாவது

சோதித்தோமா ?


சிந்தனைகளுக்கு

சிறையிட்டு...


சமன்பாடுகளை

சரிபார்த்து

ஆராயாமல்

அப்படியே

ஒப்புவித்து...


மதிப்பெண்கள்...

மதியைத் தின்று

மாணவ சமூகத்தை

மந்திகளாக்குகிறது...



முற்றுப்புள்ளி...

வார்த்தைகள்...
முடிவில்
முற்றுப்புள்ளியை
வாங்க மறுத்து
முரண்டு பிடிக்கிறது

துவரம் பருப்பை
வாங்கிச்செல்ல
நியாய விலைக்கடையில்
நிற்கும்
நீண்ட வரிசையாய்...
காற்புள்ளியை ( , )
வாங்கிக்கொள்ள
காத்துக்கிடக்கிறது
சொற்கள்

ஆச்சரியக்குறியோ
சிகரத்தில் ஏறி
சிம்மாசனமிட்டு
அமர்ந்திருக்கிறது

கேள்வித்தாள்களில்...
எஜமானராய்
எழுந்து நின்று
எழுத்துக்களை
ஏவல் புரிகிறது
வினாக்குறி

இப்படி...

எல்லா மொழியிலும்
எல்லாக்குறிகளும்
உற்சாகமாய்
உலா வருகிறது...

எனினும்...

முற்றுப் புள்ளிக்கு...
முக்காடிட்டு
முடக்கி வைக்கிறது
மொழிகள்....

வளர்ச்சியை
தடுக்கும்
வானளாவிய தடையாய்
வந்து நிற்கிறது
முற்றுப்புள்ளி...


முற்றுப்புள்ளி...
முன்னேற்றத்தின்
முட்டுக்கட்டை
என்பதாலா
ஏற்றுக்கொள்ள
மறுக்கிறது
எந்த மொழியும்?








ஆசை

குழந்தைப் பருவத்தில்
பொருளை...
மண்ணுக்குள்
ஒளித்து விளையாட
மனிதனுக்கு
ஆசை...

முதுமைப் பருவத்தில்
மனிதனை
தனக்குள்
ஒளித்து விளையாட
மண்ணுக்கு
ஆசை...

விளங்கவில்லை...


கஷ்டப்பட்டு சேர்த்த

காசுகள்

காணிக்கையாய்

உண்டியலில்...


சில்லரைச் சத்தத்தில்

சிந்தை மகிழ்வானா

இறைவன்?


சுவாசிக்கும் காற்று

சுழல்கிற பூமி

எழுகிற பிறப்பு

விழுகிற இறப்பு

எல்லாம்

நீ...


அனைத்தும்

உன்னிடத்தில்...


காணிக்கைகள்

எவருக்கு?

கடவுளே விளங்கவில்லை.....

புறப்பட்டு வரட்டும்...


அறுவடை செய்பவன்

ஆடை நெய்பவன்...


இரும்பை இளக்கி

ஈடில்லாச் சூட்டில்

உருக்கி வார்த்து

உபயோகப் பொருளாய்

உருமாற்றுபவன்...


விதைகளோடு

வியர்வைத் துளிகளையும்

விலா நோக

மண் துகள்களுக்குள் தூவி

உலக உயிர்களுக்கு

உணவிடும்

உழவன்...


ஊர் காக்க...

உறக்கத்தைத் தொலைத்து

உறவை உதிர்த்து

உதிரம் உதிர்த்து

உன்னையும் என்னையும்

இராப் பகலாய் காத்திடும்

ராணுவ வீரன்...


துணி துவைப்பவன்

தூய்மைப் பணி செய்பவன்...


வண்டி இழுப்பவன்

வாகனம் ஓட்டுபவன்..


இப்படி...

எத்தனை...

எத்தனை...

தொழில்கள்

தொழிலாளிகள்

எம் தேசத்தில்...


இவர்கள்...

உழைக்கின்ற

ஊதியத்தில்

வயிற்றுக்குச் சோற்றை

வாங்கி உண்பவர்கள்...


என்ன தொழில்

செய்கிறார்கள்

எம் தேசத்தை

ஆள்பவர்கள்?


அன்று...

அன்றாடம்...

அரை வயிற்றுக் கஞ்சிக்கு

அடுத்தவரிடம்

அடைக்கலம் புகுந்தவர்கள்...


அன்றைய

இருப்பு

அரைஞான் கயிறு...


இன்றைய

இருப்பு

ஆயிரக்கணக்கான கோடிகள்...


அதிர்ஷ்ட தேவதையின்

ஆசிர்வாதம் பெற்ற

அதிலாபத் தொழிலாய்

அங்கீகரிக்கப்பட்டு விட்டது

அரசியல்...


சூரியன் என்ன...

இலை என்ன....

கை என்ன...

எந்தச் சின்னமாய்

இருந்தாலென்ன?

சுயலாபச் சுருட்டலில்...


எடுப்பவர்களை

எடுத்தெறிந்து...

தம்மையும்

தாம் சேர்த்ததையும்

கொடுப்பவர்களை

கொண்டு வருவோம்

நம்மை ஆள


புறப்பட்டு வரட்டும்

புது அரசியல்...







வருமா?


இரு இலைகளே

ராஜ இலைகள்...

ராஜாக்களும்

இவர்களே...


இலைக்கூட்டத்தின்

மனதில்

இமைப்பொழுதும்

பயம்


வீசும் காற்றில்

அசைவதற்கும் கூட

அனுமதி கேட்டு

அஞ்சி நிற்கிறது

இலைகள்...



ராஜ இலை...

கீழிருக்கும் இலையை

உச்சாணிக்கு உயர்த்தும்

உடனே

உதிர்த்துவிடும்


இங்கு...

எதுவும்

நிரந்தரமில்லை


நடுக்கத்திலேயே

இலைகள்

நலிவடைந்து போகிறது


நமது

நாட்டுப்பண்ணில்

ஒரு வரி மட்டுமே

இவர்களது

தேசியகீதம்...

ஜெய ஜெய ஜெய ஹே!


அகிலத்திற்கு

அறிமுகப்படுத்திய

ஆணிவேரோ

மண்ணிற்குள்...


அந்த

மூன்றெழுத்து

மூச்சுச் சொல்லை

முடக்கி விட்டது


அந்த

பிரம்மாஸ்திரத்தை

பிரயோகிக்க

பிரியப்படவில்லை

ராஜ இலை...


விளைவு...


தமிழகத்தில்

இலைக் கூட்டத்திற்கு

இப்பொழுது

இலையுதிர்காலம்...


இலைகள்

மீண்டும் துளிர்க்குமா?


வருமோ
வசந்தகாலம்?
வாக்காளனின்
விரல் நுனிகளுக்குள்
விடைகள் கிடக்கிறது


வினா?


தமிழகத்தில்...

அந்த

முதுபெரும்

சூரியனிடமிருந்து

வெப்பத்தை

வாங்கிச் சுவாசிக்கிறது

சூரியக் குடும்பம்


தங்களிடமிருந்தும்

வெளிச்சக்கீற்றுகள்

வெளிப்படுவதாய்

வெளியிடுகிறது

செய்திகளை

ஒவ்வொரு கோளும்...


சூரியனை

பணிகளை

நிறுத்திக் கொண்டு

படுக்கச் சொல்கிறது

சுற்றம்...


ஆதவனை விட

அதிவேகம்

எங்களுக்குள் இருக்கிறது


சூரியனே

சும்மா இரு

இரு கோள்கள்

நாங்கள்

இருளிலும் ஒளிவீசுவோம்

என்கிறது...


இதுபோக...

சூரியக் குடும்பத்தைச்

சுற்றி

எண்ணற்ற சுயநல

நட்சத்திரங்களும்

நகர்ந்து திரிகிறது.


சூரியனுக்குப் பிறகு

சுடர் விடுமோ

சுற்றி நிற்கும்

கோள்கள் ?


எழுகிறது

எதிர்கால வினா


விடை

காலத்தின் கைகளில்...


இல்லை... இல்லை...


வாக்களிக்கும்

விரல்களுக்குள்...