இருபது ஆண்டுகளுக்கு முன்பு...
எங்கள் ஊரில்
தாலி முதல் தங்க நகைகள் வரை
தயாரிக்கும் தங்கச் சிற்பி
தங்கைய ஆசாரி
திருமண நாளை
உறுதிப்படுத்தும் உரிமை
புரோகிதர்களுக்கும்
புரட்டிப் பார்க்கும்
பஞ்சாங்கங்களுக்கும்
இம்மியளவும் இருந்ததில்லை
தங்கைய ஆசாரி
தாலி தரும்
திருநாளே திருமண நாள்
அவர்
குனிந்து பர்க்கும் நாள்
கும்பாபிசேகம் ...
நிமிர்ந்து பார்க்கும் நாள்
நிச்சயதார்த்த விழா ...
காதிலிருந்து
காலில் அணியும்
கொலுசு வரை அவரது
கொல்லுப் பட்டறையில்
கொலு வீற்றிருந்தது
தங்கமாய் ....
தங்கம்
அவரிடம்
அனுமதி வாங்கியே
எங்களூருக்குள்
எட்டிப் பார்க்கும் ...
இன்று ...
தடுக்கி விழுந்தால்
தங்க மாளிகைகள் ...
தங்கைய ஆசாரி
எடுபிடியாய்
ஏதோ ஒரு நகைக் கடையில் ...
தங்கம் கூடத்
தகரமாகுமோ ?