நீண்ட நாளாக ஒரு சந்தேகம் இருந்து வந்தது. இந்த இனம் பூண்டோடு அழிந்தது என்று சொல்கிறார்களே. நாம் சமையலுக்கு உபயோகப்படுத்தும் பூண்டுக்கும் அழிவுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது?. தமிழ் புலவர்கள் யாரிடமாவது கேட்டுத்தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆவல் மனதில் இருந்தது. சென்ற வாரம் பேராசிரியர் அப்துல் காதர் அவர்களை சந்திக்கின்ற வாய்ப்பு கிடைத்த பொழுது அவர் அதற்கு விடையளித்தார். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். பூண்டு என்பது மிக மிக மெல்லிய தாவரம். தாவரங்களிலேயே நுண்ணியது பூண்டு. ஆனால் நாம் உபயோகப்படுத்தும் வெள்ளை பூண்டு அல்ல. அந்த மிக மெல்லிய உயிரினம் கூட இல்லாமல் உயிரினங்கள் முற்றிலுமாய் அழிவதைத்தான் பூண்டோடு அழிந்தது என்று கூறுகிறார்கள் என்றார். மேலும் தென் மாவட்டங்களில் பூடோடு அழிந்தது என்று சொல்வார்கள். பூடு என்பதுதான் இங்கு பூண்டு என்று மறுவியுள்ளது என்றும் கூறுகிறார்கள்.