அனுபவம்

வாழ்க்கைப் பயணத்தில் ஒவ்வொரு மனிதனும் சேர்க்கிற ஒப்பற்ற சேமிப்பு அனுபவம். மண்ணில் பிறந்த விநாடி முதல் வளர்கிற ஒவ்வொரு நொடியிலும், ஒவ்வொரு அசைவும் வாழ்க்கைத் தத்துவத்தை போதிக்கிறது. சந்தோசம், துக்கம், அழுகை ஒவ்வொன்றும் ஏற்படுத்துகிற தாக்கங்களை மனிதன் தன் மூளையில் பதிவு செய்து கொள்வதால்தான் எதிர்காலம் என்கிற ஏணியில் ஏறுகிறபோது தடுமாறாமல் ஏறி உயர்ந்த நிலைக்குச் செல்கிறான். எவர் ஒருவர் தன் கடந்த கால வாழ்வின் கசந்த அனுபவங்களையும், மகிழ்ச்சியோடு இருந்த மனநிலையையும் நினைவில் கொண்டு ஒவ்வொரு அடியையும் முன்னே எடுத்து வைக்கிறாரோ அவரது வாழ்க்கைப் பாதை வெற்றியை நோக்கிச் செல்கிறது. தனக்கு மட்டும் பாடமாக எடுத்துக் கொள்ளாமல் தன் சந்ததிகளுக்கும் அதனை போதித்துச் செல்கிறாரோ அந்த
சந்ததிகளில் அதனை ஏற்றுக் கொள்பவர்கள் மகத்தான சாதனைகள் புரிகிறார்கள்.
சொல்லுகிற அனுபவ வார்த்தைகளை காதில் வாங்காமல் செவிடர்களாய் இருப்பவர்கள், தங்கள் காதுகளை மட்டும் மூடிக் கொள்வதில்லை தங்கள் வாழ்க்கையின் எதிர்கால ஏற்றமிகு கதவுகளையும் மூடிக்கொள்கிறார்கள். இந்த பூமியின் மீது நம் முன்னோர் என கோடிக் கணக்கானோர் பிறந்து தவழ்ந்து, வாழ்ந்து மடிந்து தங்களது பிறப்பின் மிச்சமாக அனுபவங்களை நிரந்தர சொத்தாக மற்றவர்களுக்கு சொல்லிச் சென்றிருக்கிறார்கள். எனவே குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும் வாழ்க்கையில் வலிகளும், வலிமைகளும் வரும் வழியை சொற்களால் அனுபவத்தை பகிர்ந்தளிப்போம். நிச்சயம் அவர்களுக்கு இருள் நேரத்தில் கை விளக்காய் மாறும். வாழ்க்கையை வெளிச்ச தேசத்தை நோக்கி நடைபோடச் செய்யும்.

ஒரு சாலையில் வேகமாகப் பயணிக்கிற வாகனம் அந்த சாலையில் “ சாலை பழுது பார்க்கப்படுகிறது கவனம் தேவை ” என்ற அறிவிப்பு பலகையைப் பார்த்தவுடன் ஓட்டுபவர் எச்சரிக்கையாகி வேகத்தை குறைத்து கவனமாக ஓட்டுகிறார். அதைப் போல அனுபவப் பகிர்வும் ஒரு எச்சரிக்கை தான்.

அனுபவத்தைச் சொல்வதும் அறிவுரையைப் போலத்தான். உலகில் இந்த ஒன்றில்தான் கொடுப்பவர்கள் அதிகம். வாங்கிக் கொள்பவர்கள் மிக மிக குறைவு. எல்லோரும் ஏற்றுக் கொண்டால் இந்த உலகமே அறிவாளிகளின் உறைவிடமாக உருமாறியிருக்குமே ?