சென்ற 2006 தேர்தலில் இந்த தொகுதியில் 16 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அப்போது மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 4,20,186. இதில் பதிவான வாக்குகளின் சதவீதம் 70.65% ஆகும். 391 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தது. சென்ற தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் முறையே
கண்ணப்பன் - 1,23,490 - 41.60 % ( ம.தி.மு.க)
எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம் - 1,13,596 - 38.27 % (காங்கிரஸ்)
டென்னிஸ் கோவில் - 37,901 - (தே.மு.தி.க)
சின்னராஜ் - 13,545 - (பா.ஜ.க)
இது சென்ற தேர்தல் நிலவரம்.
இந்த தேர்தல் நிலவரம் பற்றி இனி பார்ப்போம்.
தொண்டாமுத்தூரை சுற்றி பொதுமக்களை பார்த்து பேசியதை உங்களிடம் சொல்கிறேன். காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் கந்தசாமிக்கு பலம் எதுவென்றால், தி.மு.க. வின் தேர்தல் பணிதான். அதனுடன் ஒவ்வொரு ஓட்டுக்கும் அவர்கள் கொடுக்கும் காகித கவர். பூத் சிலிப் கொடுக்கும் போதே உங்கள் வீட்டில் எத்தனை ஓட்டுக்கள் என்று கேட்டு, நான்கு ஓட்டு என்றால் நான்கு சிலிப்பும், நான்கு கவரும் கொடுக்கிறார்கள். அந்த கவரில் இருநூறு ரூபாய் இருப்பதாக சொல்கிறார்கள். இதுவே பெரும் பலம்.
கொங்குநாடு முன்னேற்றக் கழக வேட்பாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் இவரது பலம் கடந்த பாராளுமன்ற தேர்தலில் கொ.மு.க. சார்பில் கோவையில் போட்டியிட்டு 1,28,000 வாக்குகளை பெற்றதால் வாக்களர்களுக்கு நன்கு அறிமுகம் ஆனவர்.
மேலும் தே.மு.தி.கவுக்கும், கொ.மு.க வுக்கும், அ.தி.மு.க போட்டியிடாததே பலம். இந்த தொகுதியில் அ.தி.மு.க போட்டியிடாதது அக்கட்சி எடுத்த தவறான முடிவு என மக்கள் சொல்கிறார்கள். அக்கட்சியின் ஓட்டுக்கள் சிதறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். கம்யூனிஸ்டும், பா.ஜ.க வும் கணிசமான ஓட்டுக்களைப்பெறும். வாக்களிப்பதில் மக்கள் ஆர்வம் காட்டவில்லை. இறுதி நிலவரப்படி ஏறத்தாழ 50 % வாக்குக்கள் பதிவானால் வெற்றி யாருக்கு என்று சொல்ல முடியாது. அதிக வாக்குகள் பதிவானால் மட்டுமே காங்கிரஸுக்கு சாதகமாக அமையும். குறைவான வாக்குகள் பதிவானால் கொ.மு.க. , தே.மு.தி.க. இந்த இரண்டில் ஏதோ ஒன்று வெற்றி பெற வாய்ப்புண்டு.