எங்கே போகிறது? எங்கள் பழம்பெரும் பாரத தேசத்தின் பண்பாட்டை தாங்கி நிற்கும் தாய்க்குலங்களின் மனநிலை? உலகத்தில் உள்ள ஒவ்வொரு நாடும் இந்திய தேசத்தை அண்ணாந்து பார்த்து அதிசயித்துப் போவது எதைக்கண்டு? எப்படி வேண்டுமானாலும் சுற்றித்திரிந்த மனிதக்கூட்டம் இப்படித்தான் வாழ வேண்டும் என்ற வரையறைக்குள் வந்துவிடத்துடிக்கிறதே யாரைப் பார்த்து?
இவை அனைத்திற்கும் ஒரே விடை பாரதப் பாவைகளின் பண்பாட்டைப் பார்த்து. இந்து மதப்படி ஒவ்வொரு பெண்ணும் தன் கணவனையே கடவுளாக நினைக்கிறாள். கணவனும் தன் மனைவியை உயிராக நினைக்கிறான். ஏன் முழு முதற்கடவுளாகிய ஈஸ்வரனே தன் உடலில் பாதியை தன் மனைவிக்குக் கொடுத்து அர்த்தனாரீஸ்வரனாக காட்சியளிக்கிறார். இப்படி கணவனும் மனைவியும் ஒருவரோடு ஒருவர் உயிருக்குயிராய், அணுவுக்குள் அணுவாய் கலந்து நிற்பதே உயரிய வாழ்க்கை. அப்படிப்பட்ட கணவன் கட்டிய தாலியை நெஞ்சில் சுமப்பதே பெண்ணுக்குப் பெருமை. தாலி கணவனின் நினைவுகளையும், சுய கட்டுப்பாட்டையும் சுகமாக சுமக்கிற சூத்திரக்கயிறு. இது புதிதல்ல. இதுவே நமது பண்பாடு.
இப்பொழுது ஒரு புதுக்கலாச்சாரம் புறப்பட்டு வந்திருக்கிறது.ஏதேதோ சொல்லி ஏமாந்து நிற்கும் மக்களை நல்வழிப்படுத்துவதாய் நகர்ந்து திரிகிறார்கள் காவி உடையில் சில இளைஞர்கள். புதியதாய் முளைத்திருக்கிறார்கள் இவர்கள். எதை வேண்டுமானாலும் சொல்லிக் கொடுக்கட்டும். நாங்கள் தடுக்கவில்லை. எங்கள் மனதை உறுத்துகிற விசயம் ஒன்றுதான்.
வாலிப வயதில் காவி உடையணிந்து சொற்பொழிவாற்றும் இவர்களின் படம் பொறித்த டாலர்களை எம் குலப்பெண்களும் நெஞ்சில் சுமக்கிறார்களே ! இது எப்படி நியாயம் ? இந்துமதப் பண்பாட்டை இழிவு படுத்துகிற செயல் இது. எத்தனை கஷ்டம் வந்த போதும் கண்மூடும் காலம் வரை ஏன் ஏழ் பிறப்பிலும் உன்னைத்தவிர ஒருவரையும் மனதாலும் நினைக்க மாட்டேன் என்று வாழ்ந்த எமது பெண்கள் ஏன் இப்படி தரம் தாழ்ந்து போனார்கள். எங்கோ உபதேசிக்கிற உயிருள்ள ஒரு வாலிபனுடைய படம் பொறித்த டாலரை கழுத்தில் அணிவது சரியா? துறவியே ஆனாலும் தூரத்திலேயே இருக்கட்டும். இல்லத்திற்குள் மட்டுமல்ல இதயத்திற்கு அருகிலும் அழைத்துப் போவது அநாகரீகமல்லவா ? மாற்றிக் கொள்ளுங்கள் பழக்கத்தை. மஞ்சள் கயிறுக்கு அருகில் மலிவு விளம்பர குப்பைகளை கோர்த்துக் கொள்ளாதீர்கள். இல்லமே கோயில். இல்லத்தில் இருப்பவர்களே இதய தெய்வங்கள். இதையும் மீறி மனதில் அமைதி இல்லையேல் ஆண்டவன் இருக்கும் ஆலயங்களுக்குச் செல்லுங்கள். அனாவசியமாய் வார்த்தைகளில் வசியம் பூசி சொற்களால் மக்களைச் சொக்க வைக்கிற மனிதர்களிடத்தில் மயங்கி விடாதீர்கள். நாம் பிழையானால் நமது பண்பாடும் பிழையாகிப் போகும்.