அறுவடை செய்பவன்
ஆடை நெய்பவன்...
இரும்பை இளக்கி
ஈடில்லாச் சூட்டில்
உருக்கி வார்த்து
உபயோகப் பொருளாய்
உருமாற்றுபவன்...
விதைகளோடு
வியர்வைத் துளிகளையும்
விலா நோக
மண் துகள்களுக்குள் தூவி
உலக உயிர்களுக்கு
உணவிடும்
உழவன்...
ஊர் காக்க...
உறக்கத்தைத் தொலைத்து
உறவை உதிர்த்து
உதிரம் உதிர்த்து
உன்னையும் என்னையும்
இராப் பகலாய் காத்திடும்
ராணுவ வீரன்...
துணி துவைப்பவன்
தூய்மைப் பணி செய்பவன்...
வண்டி இழுப்பவன்
வாகனம் ஓட்டுபவன்..
இப்படி...
எத்தனை...
எத்தனை...
தொழில்கள்
தொழிலாளிகள்
எம் தேசத்தில்...
இவர்கள்...
உழைக்கின்ற
ஊதியத்தில்
வயிற்றுக்குச் சோற்றை
வாங்கி உண்பவர்கள்...
என்ன தொழில்
செய்கிறார்கள்
எம் தேசத்தை
ஆள்பவர்கள்?
அன்று...
அன்றாடம்...
அரை வயிற்றுக் கஞ்சிக்கு
அடுத்தவரிடம்
அடைக்கலம் புகுந்தவர்கள்...
அன்றைய
இருப்பு
அரைஞான் கயிறு...
இன்றைய
இருப்பு
ஆயிரக்கணக்கான கோடிகள்...
அதிர்ஷ்ட தேவதையின்
ஆசிர்வாதம் பெற்ற
அதிலாபத் தொழிலாய்
அங்கீகரிக்கப்பட்டு விட்டது
அரசியல்...
சூரியன் என்ன...
இலை என்ன....
கை என்ன...
எந்தச் சின்னமாய்
இருந்தாலென்ன?
சுயலாபச் சுருட்டலில்...
எடுப்பவர்களை
எடுத்தெறிந்து...
தம்மையும்
தாம் சேர்த்ததையும்
கொடுப்பவர்களை
கொண்டு வருவோம்
நம்மை ஆள
புறப்பட்டு வரட்டும்
புது அரசியல்...