கடவுள் உண்டா? இல்லையா? என்பது என் வாதமல்ல. கடவுள் உண்டு என்பது அவர்களின் நம்பிக்கை. கடவுள் இல்லை என்பது மறுப்பவர்களின் நம்பிக்கை. இது உலகம் தோன்றிய நாள் முதல் எழுந்து நிற்கும் வினா. இதற்கு உள்ளே செல்ல நான் விரும்பவில்லை.
இயல்பு வாழ்க்கை என்று ஒன்று உண்டு. மனிதன் பாதையில் நடந்து செல்கிறபோது கால்களால் நடப்பதே நடைமுறை. இதை விடுத்து இயல்பாய் நடக்கிறபோதும், மாடிப்படிகளில் ஏறுகிறபோதும் தலைகீழாய் கைகளை தரையில் ஊன்றி நடந்து செல்வது இயல்பானதா? நடைமுறையில் இதுதான் உள்ளதா?
நீங்கள் சொல்கிறபடி கடவுள்களின் வாழ்க்கையும்,பண்டைய கால பண்பாட்டையும் நாம் பார்த்திருக்கிறோமா? ஏதோ ஏடுகளில் இருக்கிற வரிகளையும் அதுவும் உண்மையாக சொல்லப்போனால் செப்பேடுகளில் இருந்ததைக் கொண்டுதான் அன்றைய வாழ்க்கை முறையைக் கூறிக்கொண்டு இருக்கிறோம். கடவுள் மட்டுமல்ல அன்று மனிதன் கூட எப்படி வாழ்ந்தான் என்று கூறுவதெல்லாம் கற்பனை கலந்த கலவை.
ராஜராஜசோழன் கட்டிய தஞ்சை பெரிய கோயிலை நம்மால் இன்றும் பார்க்க முடிகிறது. எனினும் அவனுடைய வாழ்க்கை முறையையும், அவன் அக்கோயிலை கட்டிய முறையையும் இதைப் போல நிச்சயமாக சொல்லமுடியுமா? ஏடுகள் சொல்கிறது என்று நீங்கள் சொல்லக் கூடும் அவை அப்படியே உண்மையா?
இன்று இருக்கிற ஒரு கவிஞர், ஒரு ஆட்சியாளரைப் பார்த்து எழுதுகிறார் “வாழும் வள்ளுவர் ‘’ என்று புகழ்கிறார். இன்னும் இருநூறு ஆண்டுகள் போன பின்பு இதை உலகம் எப்படிக் கூறும் என்று நினைக்கிறீர்கள்?. முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு இரண்டாவது வள்ளுவர் வாழ்ந்தார் என்றுதான் கூறும். ஏடுகளில் புலவர்கள் எழுதும்போது மிகைப்படுத்திக் கூறியிருக்கிறார்கள். அதனைவிட அந்தச் செய்யுள் வரிகளுக்கு விளக்கவுரை தருகிறவர்கள் தங்களுக்குத் தெரிந்த புலமைகளை உள்ளே புகுத்தி, தங்கள் விருப்பத்திற்கேற்றவாறு விளக்குகிறார்கள்.
ஏன் இவைகளை எழுதுகிறேன் என்றால் சென்ற நூற்றாண்டைப் பற்றி நமக்குத் தெரியும். நமது முன்னோர்கள் வாய்வழியாகச் சொல்வதைக் கேட்டிருக்கிறோம். இதை சிறிது நம்பலாம். உலகம் தோன்றியது முதல் என்ன நடந்தது என்று கூறுவதில் எவ்வளவு உண்மை உள்ளது என்பது எவருக்கும் தெரியாது.
நான் தலைமை தாங்கிய ஒரு இலக்கிய நிகழ்ச்சியில், தமிழகத்தின் மிகப்பெரிய பேச்சாளர் ஒருவர் இலக்கிய சொற்பொழிவாற்றினார். அவர் சொன்னார் புற்றுநோய்க்கு மருந்து பாம்பின் விசத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாம்பு - புற்று பாம்பு-புற்று பாம்பிற்கும் புற்றுக்கும் சம்பந்தம் உள்ளது என்பதை கண்டுபிடிக்க 21 நூற்றாண்டுகளாகிவிட்டது என்றார். அரங்கம் அதிர கைதட்டுகள் கிடைத்தது. ஆனால் உண்மை என்ன? இதற்கு புற்றுநோய் என்று பெயரிட்டு எத்தனை ஆண்டுகள் ஆகியிருக்கிறது? இதை அவர் சொல்லவில்லை. இன்று தமிழை வியாபாரமாக பயன்படுத்துகிறவர்கள்தான் அதிகம் காணப்படுகிறார்கள். தமிழை வளர்ப்பதாகச் சொல்லிக்கொண்டே தங்கள் வருமானத்தை வளர்ப்பவர்கள் இவர்கள்.
தமிழைப்ப்ற்றி இன்னுமொருமுறை தனியாய்ப் பேசுவோம். இன்றைய நடைமுறையில் மக்கள் பழக்க வழக்கங்களைத்தான் நாகரீகம் என்கிறோம். இந்து மதமாக இருந்தாலும் சரி, எம்மதமாக இருந்தாலும் நமது பாரத தேசத்தைப் பொறுத்தவரை குறிப்பாக தமிழ்நாட்டில் வாழ்க்கைமுறை, மக்களின் சுயகட்டுப்பாடு, ஒழுக்கம், ஒரே மாதிரிதான் உள்ளது. ஒழுக்கம் தவறி நிற்பவர்களை நான் எடுத்துக் கொள்ளவில்லை. என்னைப் பொறுத்தவரை கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் குருவாகக் கருதுகிற மடாதிபதிகளானாலும் கடவுள் நம்பிக்கை இல்லை என்கிறவர்களின் குருவாக இருந்தாலும் தாலிக்கு அருகில் குப்பைகளைக் கோர்த்துக் கொள்ளாதீர்கள் என்பது தான் வாசகம். இன்றைய காலச் சூழ்நிலைக்கான வரிகள் இவை. மதங்களுக்கான வாசகம் அல்ல. மக்களின் வாழ்க்கைக்கான வாசகம்.