உயிரே உதிராதே !

உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே

என்று சொன்னான் மகாகவிபாரதி. விரிந்து பரந்து கிடக்கிறது வானம். இவ்வளவு பெரிய வானம் ஒரு மனிதனின் தலை மீது விழ வருகிறது என்று எண்ணினாலே மாண்டுபோவார்கள் பலர். இவ்வளவு சிறிய தலையின் மீது வானமே இடிந்து விழுந்தாலும் அச்சமில்லை. உயிரே போயினும் அச்சமில்லை என்கிறார் பாரதி. இத்தகைய மனநிலை இன்று எத்தனை பேரிடத்தில் காணப்படுகிறது. அஞ்சி அஞ்சி சாவதே வாழ்க்கையில் வாடிக்கையாகிப் போனது. எந்த நேரத்தில் எது நடக்குமோ? எந்நேரமும் பயம். வருவது வரட்டும் வருவதை எதிர்கொள்வோம் என்ற பக்குவம் வேண்டும். சாலையில் வண்டியில் செல்கிற போது நாய்கள் துரத்திக் கொண்டே கடிக்கிற மாதிரி வேகமாக ஓடி வரும். வண்டியை வேகமாக ஓட்டினால் அதைவிட வேகமாக துரத்தும். வண்டியின் வேகத்தைக் குறைத்து எதிர்த்து நின்றால் திரும்பி ஓடி விடும். அதைப் போல பிரச்சனைகள் வருகிற போது அதை எதிர்கொள்ளப்பயந்து ஓடி ஒளிந்தால் தீர்வு கிடைத்துவிடப் போவதில்லை. திரும்பி நின்று எதிர்கொண்டு பார்த்துவிடுவோம் என்று எதிர்த்து நின்றால் எவ்வளவு பெரிய பிரச்சனையும் எளிதில் முடிந்து விடும்.

’’ எதையும் தாங்கும் இதயம் வேண்டும் ’’ என்றார் அறிஞர் அண்ணா. எத்தகைய சிக்கல்கள் வந்தபோதும், பழிகள் வந்தபோதும், அன்றாட சிரமங்கள் நம்மை அமுக்குகிற போதும் தீர்வு காண்கிற தீரம் நமக்குள்ளே பெருக்கெடுக்க வேண்டும். அதை விடுத்து கோழைத் தனமாக வாழ்க்கையை மாய்த்துக் கொள்பவர்களை என்னவென்று சொல்வது? வாழ்க்கை என்கிற படகில் பயணம் செய்யும்போது மனவலிமை என்கிற துடுப்புதான் நம்மை வழி நடத்திச் செல்கிறது. ஆற்றைக் கடந்து செல்ல படகிற்கு துடுப்புதான் துருப்புச்சீட்டு. இந்த துடுப்பையே படகு பாரம் என்று நினைத்து தூக்கி எறிந்தால், ஆற்று வெள்ளம் படகை அடித்துக்கொண்டு போகும். இப்படித்தான் இன்று சில படகுகள் சின்னா பின்னமாகிப் போகிறது . வருகிற சிக்கல்களை, வலியை தாங்கி நடக்கிற தகுதிகளை வளர்த்துக் கொள்ளாமல், சிலர் மனவலிமை என்கிற துடுப்பை தூக்கி எறிந்து உயிரை உதிர்த்து விடுகிறார்கள். எள்ளளவு கஷ்டத்தையும் எரிமலையைப் போல் பாவிக்கிற மனநிலை எப்படி வருகிறது இவர்களுக்கு?

மானுட வாழ்வென்ன மறுபடியும் மறுபடியும் கிடைக்குமா?

போற்றுபவர் போற்றட்டும் புழுதி வாரி தூற்றுபவர் தூற்றட்டும் தொடர்ந்து முன் செல்வேன் என்கிற கவிஞனின் வரிகளை கடைப் பிடிக்க ஏன் மறந்து போகிறோம்.

உலகத் தடகளப் போட்டியில் நேற்று முன்தினம் ஜமைக்கா நாட்டைச் சேர்ந்த உசேன்போல்ட் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 9.58 விநாடிகளில் கடந்து புதிய உலக சாதனை படைத்துள்ளார். உலகின் அதிவேக வீரர் என்ற பட்டத்தை பெற்றுள்ளார்.

ஆயினும் இவரது கடந்த காலத்தை திரும்பி பார்க்கவேண்டும். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தன்னுடைய காரை ஓட்டிச்செல்கிறபோது விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில் இவரது இடது காலில் காயம் ஏற்பட்டு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. இந்த தடைகளை எல்லாம் மறந்து கடின பயிற்சியின் மூலம் இன்று சாதித்துக் காட்டியிருக்கிறார் உசேன்போல்ட்.

காலம் நமக்குத் தருகிற கசப்பு மருந்தைக் கண்டு, கோபத்தின் உச்சியில் மனிதன் தன்னை மறந்து முடிவெடுக்கத் திணறி மூச்சடைத்துப் போகிற மூடப்பழக்கத்தை முடிவுக்குக் கொண்டு வருவோம். தன்னை மறந்து செய்கிற தற்கொலைகளை தடுப்போம். உறவுகள் மட்டுமல்ல உலகமே நம் பெயரை உரக்கச் சொல்லட்டும். புல் பூண்டுகளைப் போல வாழ்ந்து புதைந்து போவதைவிட புத்தனைப் போல பூமியின் மீது ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் நம்மைப் போற்றும்படி சுவடுகளை பதித்துச் செல்வோம்.