பூவுலக சொர்க்கம்


எங்கள் இல்லத்து சுவர்களிலும்
இருக்கின்ற பொருட்களிலும்
அனைத்திலும் அப்பிக் கிடக்கிறது
அன்பு மகளின்
அன்றாட சேட்டைகள்

மொழு மொழு
குழ்ந்தையாய்
தவழ்ந்த போது
தாங்கி மகிழ்ந்த
மொசைக் தரைகள்

பிஞ்சுப் பாதங்களை
பிரியமாய் தாங்கிய
படிக்கட்டுகள்

இப்படி
அஃறினைப் பொருட்களும்
ஆசையோடு வளர்த்தது
உன்னை...

மூன்று வயதில்...
காதுகுத்திய வலியில்
கத்தி அழுத போது
உன் கண்களை விட
எங்கள் கண்களே
அதிகம் அழுதது

படிப் படியாய்
வளர வளர
படிப்பிலும் பக்குவத்திலும்
முதலிடத்தை
முடிந்து வைத்துக்கொண்டவள்
நீ...

ஒவ்வொரு முறை
பார்க்கும்போதும்
நெஞ்சில் பரவும்
பரவசங்கள்...

இந்திர லோகத்தில்
இருந்தாலும்
இப்படியொரு சந்தோசம்
இனியும் வாய்க்காது
எங்களுக்கு...

காலச் சக்கரம்...
கடந்த கால நிகழ்வுகளை
கச்சிதமாய் சேகரித்து
மறக்காமல்
மறுஒலிபரப்பு செய்கிறது

உதாரணம்...
உருவத்திலிருந்து
உச்சரிப்பு வரை
மறுவார்ப்பாய்
மாறியிருக்கும்
மகளே சாட்சி

ஆகாய விமானத்தை விட
அதிவேகமாய்
கடந்து போனது
காலங்கள்...

நிமிர்ந்து பார்ப்பதற்குள்
இருபது வருடங்கள்
இருபது நிமிடங்களாய்...

உன்
இதயத்தின் இசைவோடு
ஒரு
மங்கள நாள்
மணநாளாக
உறவினர் சூழ
உறுதிப்படுத்தப்பட்டது


தினமும்
உன்
கை படாவிட்டால்
நம் வீட்டுக்கதவுகள் கூட
கலங்கிப்போகும்

எங்கள்
செவிச்சுவர்களில்
எப்பொழுதும்
எதிரொலிக்கிறது
என் கண்ணே
உன் குரல்

இனி..
உன் முகம் பாராமல்
காலை மாலை
இரவு வேளை என்று
காலங்கள்
இனி கடந்து போகுமோ?

எங்களை
கடத்திப்போகுமோ?

ஒப்பில்லா சந்தோசம்
ஒருபுறம்...

வெந்தணலில் வேகின்ற
பூக்களின்
புல்லிவட்டங்களைப் போல்
பிரிவுத்துயரம்
மறுபுறம்

மகளின்
மணக்கோலம் கண்டு
விழிகளிலிருந்து
விழுகிறது
ஆனந்தக் கண்ணீர்

ஆயினும்..
ஆயினும்..

அது
கண்ணீர்...