முயற்சி

முன்னூறு முறை விழுகிற போதும் சிறு சலிப்பு கூட
இல்லாமல் புன்னகை தவழ தத்தித் தத்தி தவழ்ந்து எழுந்து நடை பயில்கிறது குழந்தை.தடுமாறி விழுகிற போதும் எத்தனை முறை விழுந்தோம் என எண்ணிக்கை எடுக்கும் பக்குவம் அதற்கு இல்லை.அதன் ஒரே எண்ணம் நடக்க வேண்டும். எழுந்து சென்று எட்டுகிற பொருளை எடுக்க வேண்டும். தொடர்ந்து செய்கிற முயற்சிகளால் தொட்டுவிடுகிறது தன் இலக்கை. வாழ்க்கையிலும் இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும். இது வெறும் அன்றாட நடவடிக்கை அல்ல.அற்புதமான தத்துவம் இதனுள் பொதிந்திருக்கிறது.எந்த ஒரு மனிதன் தன் தோல்விகளைக்கணக்கெடுக்காமல் தொடர்ந்து முயல்கிறாரோ அவர் நிச்சயம் நினைக்கிற காரியத்தை சாதித்துக் காட்டுவார். அப்படியே கணக்கெடுத்தாலும் பதினைந்து முறை தோல்வியுற்று விட்டோமே என எண்ணாமல் பதினைந்து தடைப் படிகளை கடந்து மேலேறி வந்து விட்டோம். வெற்றிக்கு நமக்கு மிக அருகில் தான் இருக்கிறது. சீக்கிரம் அகப்பட்டு விடும் என்கிற சிந்தனையே வலுவாக இருக்க வேண்டும்.


உலக உயிரினங்களின் ஜீவநாடி எது என்றால் தொடர்ந்து முயற்சிப்பது தான். ஒரு நாள் மட்டுமே உயிர் வாழ்கிற உயிரினத்திலிருந்து முன்னூறு ஆண்டுகள் உயிர் வாழும் ஆமைகள் வரை, வாழ்கிற ஒவ்வொரு நிமிடமும் என்ன நிகழ்ந்தாலும் அதனைத் தாங்குவதற்கும் அதற்கேற்ப தன்னை தயார்படுத்திக் கொள்ளவும் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்கிறது.


எறும்புகள் எப்போதாவது நின்று பார்த்திருக்கிறோமா? ஓய்வு என்பதை ஒரு போதும் ஒத்துக் கொள்வதில்லை அவைகள். ஜடப்பொருள்கள் மட்டுமே அசையாமல் அப்படியே கிடக்கிறது. உயிருள்ள ஒவ்வொன்றும் எடுத்த காரியத்தை சாதிப்பதற்கு ஓராயிரம் முறை ஆனாலும் ஓயாமல் முயற்சிக்கிறது.


ஏன் மனித இனம் மட்டும் இதற்கு விதி விலக்கா? “ சாதிப்பதற்கு முன்னால் சாகக் கூடாது என்று நினைப்பவர்கள் நாங்கள் ” இதை நட்டு வையுங்கள் விதையாக உங்கள் மனதிற்குள். நாளை இது விருட்சமாகி இந்த தேசத்தையே உங்களை நோக்கி உற்றுப் பார்க்க வைக்கும் உற்சாக மந்திரமாகும். இதை மீண்டும் மீண்டும் சொல்லிப் பாருங்கள் அசுர வேகம் உங்களுக்குள் உருவாகும்.


அமெரிக்காவைச் சேர்ந்தவர் எரிக்வெய்கன் மேயர் 13 வயதிலேயே கண் பார்வை பறி போய் விட்டது. ஆயினும் அயராத முயற்சியால் 1999-ம் ஆண்டு எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏறிக்காட்டினார். முதன் முதலாய் பார்வையற்ற ஒருவரின் பாதச்சுவடுகளை பெருமையோடு பெற்றுக்கொண்டது எவரெஸ்ட் சிகரம். தன்னை விட இவரே உயர்ந்தவர் என்றும் ஒப்புக் கொண்டது. இப்படி எத்தனையோ எடுத்துக்காட்டுகளைக் கூறலாம். சாதாரண மனிதனாக இல்லாமல் உதாரண மனிதனாக உருவாக வேண்டும் ஒவ்வொருவரும்.


முயற்சிகளே மனிதனின் முதுகெலும்பு. தொடர்ந்து முயற்சிப்போம். எதுவாக இருந்தாலும் அது நமக்கு எட்டித் தொடும் தூரம்தான்.