கலியுக கர்ணன்...


தேரோடும்
சென்னிமலை வீதிகள்
தேறுதலின்றி
தேம்பித் தேம்பி
அழுகிறது...

எத்தனையோ...
காலடிச்சுவடுகள்
கடந்து போயிருக்கிறது
இந்தப் பாதைகளை...

மாமன்னர்கள்
மறவர்கள்
மந்திரிகள்...
பலரின்...
உலாக்களையும்
ஊர்வலங்களையும்
சந்தித்திருக்கிறது
சாலைகள்...

தரணிதரா...
உன்
சவ ஊர்வலத்தில்தான்
வீதிகள்...
விசும்பி விசும்பி...
விடிய விடிய...
உதிர்க்கிறது
வீர அழுகையை...

உன்
தியாகத்தால்
புழுதி அணுக்களும்
புழங்காகிதமடைந்திருக்கிறது

விபத்தில்...
மூளைச்சாவு
முடக்கிப் போட்டது
உன்னை...


உயிருள்ளபோதே...
அறுத்துக் கொடுத்தாய்
ஆறு உடலுறுப்புகளை
அடுத்தவர்கள் வாழ...

சென்னிமலை...
இரண்டாம் முறையாய்
இறுமாப்புக் கொள்கிறது...

முதல்முறை...
தியாகி குமரனுக்கு...

இரண்டாம் முறையாய்...
வீர இளைஞனே
விளையாட்டு வீரனே
தங்கமே...
தரணிதரா
உனக்காய்...

சென்னிமலை
மண்ணுக்குள் புதைந்து...
எங்கள்
குருதிக்குள்
ஊன்றி விட்டுச் சென்றிருக்கிறாய்
உடல் தானமென்னும்
உயரிய விதையை...

சென்னிமலையின்
மலை முகடுகளும்
மண்டியிட்டு
தரை தொட்டு
வணங்குகிறது
தரணிதரா
உனக்காக...

மனித வாழ்வில்...
புதிய அத்தியாயத்தை
புகுத்தியவனே...

சென்னிமலை...
செருக்கோடு
சேமிக்கிறது
உன்
புகழை...