பொதிசுமக்கும் கழுதைகள்

சுதந்திர தேசத்து
அடிமைகள்
நாங்கள்...


எவ்வளவு...
ஏற்றினாலும்
பொருத்துக் கொண்டு
பொதிசுமக்கும்
கழுதைகள்...


குடும்ப வருமானத்தின்
பெரும்பகுதியை
பெட்ரோல் குடிக்கிறது...


மிஞ்சியதை...
மிகுதியாய்க் குடிக்கிறது
டாஸ்மாக் கடைகள்...


பார்த்த பொருளை வாங்க...
பாக்கெட்டிலிருந்து
பணம் எடுப்பதற்குள்
பாதி விலை
ஏறிவிடுகிறது...


எப்போதும்...
விலைவாசி
ஏறுமுகமாய்...


ஈட்டுகின்ற
வருமானமோ...
இறங்கு முகமாய்...


இப்படியே...
வாழையடி வாழையாய்...
வருகிறது இந்தியனின்
வாழ்க்கைப் போராட்டம்...


என்று வரும்...
எதார்த்தத்தைப் 
புரிந்து கொள்ளும்
எளிமையான அரசு...


அது வரை...


எவ்வளவு...
ஏற்றினாலும்
பொருத்துக் கொண்டு
பொதிசுமக்கும்
கழுதைகள்
நாங்கள்...















அடடா... மழைடா..

ஈரோடு, திருப்பூர், கோவை, நாமக்கல், சேலம் மாவட்டங்களில் இதுவரை பெய்த மழைகளைக காட்டிலும், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு விடிய விடியப் பெய்த மழையே கனமழை. இரவு 12 மணிக்கு தொடங்கி காலை 7 மணி வரை கொட்டித்தீர்த்து விட்டது வானம்.  ஏகப்பட்ட இடி, மின்னல்கள். சாலைகளெல்லாம் வெள்ளத்தால் அரித்துக்கிடக்கிறது. திருப்பூரில் நொய்யல் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஆற்றின் கரையோரம் இருந்த வீடுகள் அடித்துச்செல்லப்பட்டது. நிறையப்பேரைக் காணவில்லை ஓரத்துப்பாளையம் அணையில் தேடிக் கொண்டிருக்கிறார்கள் உடல்களை.

           இதைக்காணுகிற போது... இந்த உலகம் தோன்றிய நாள் முதல் இன்று வரை மனித இனத்தையும், நிறைய நிலப்பரப்பையும் விழுங்கியிருக்கிறது  தண்ணீர். இயற்கையே உயிரினங்களை உருவாக்குகிறது.  இறுதியில் இயற்கையே உயிர்களை அழிக்கிறது. தீயினால் ஏற்படும் அழிவு குறைவு.  தண்ணீர் மட்டுமே பேரழிவை உண்டாக்குகிறது.
         
           வானிலையைப் பற்றிய அறிக்கை மூலம் மழை வருவதைச் சொல்லிவிட முடியும். வெள்ளம் வரப்போவதை யாரால் சொல்லமுடியும். உயருகிற நீர் மட்டம் ஊர்மக்களை இழுத்துச்செல்கிறது. உலகம் தோன்றிய நாள் முதல் இன்றுவரை கால்வாசி நிலப்பரப்பை கடல் விழுங்கியிருக்கிறது. கோவலன், கண்ணகி வாழ்ந்த செல்வச்செழிப்பு மிக்க பூம்புகார் கடலுக்கடியில் இருக்கிறது. இன்றும் பூம்புகார் என்ற பெயர் இருக்கிறது. நாம் அங்கு சென்றால் கடற்கரை மணலையும், படகுகளை மட்டுமே பார்க்க முடிகிறது. ஒரு துறவி எழுதிய தூய தமிழ் காப்பியமான சிலப்பதிகாரத்தில் இடம் பெரும் வணிகச்சிறப்புமிக்க துறைமுக நகரமான பூம்புகாரை தண்ணீர் தழுவி அணைத்துக்கொண்டது. 

     போதும் தண்ணீரே உன் பொல்லாத கோபம். “ஆறு கரையினில் அடங்கி நடந்திடில் காடு வளம் பெறலாம்” என்ற கண்ணதாசன் வரிகளுக்கேற்ப அடிக்கடி கரை மீறுவதை கட்டுப்படுத்தி எங்களை வளப்படுத்திட வேண்டும். நாமும் நதிகளின் ஓட்டத்தில் ஏற்படும் தடைகளை நீக்க  நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.


விலைவாசி

பாமரன் கேட்டான்... 
என்று... குறையும் 
எகிறிக்குதிக்கும் 
எங்கள் தேசத்து 
விலைவாசி 


அரசியல்வாதி... 
அவசரமாய்ச் சொன்னான்... 


விலைவாசியை விட
பன்மடங்கு உயர்ந்திருக்கிறது... 
பாமரன்
வாக்களிக்க.. 
வாங்கும் விலை... 


விலைவாசி ஏற்றத்தால்... 
பாதிக்கப்படுவது 
பாமரனோடு 
நாங்களும் தான்...