தாலியை ஏன் ஆண்கள் சுமப்பதில்லை. இது உங்கள் கேள்வி. என் கேள்வி ஏன் ஆண்கள் சேலை அணிந்து கொள்வதில்லை? ஏன் ஆண்கள் தோடு போட்டுக்கொள்வதில்லை? ஏன் ஆண்கள் மூக்குத்தி போடுவதில்லை? ஏன் ஆண்கள் முத்துமாலையும், மாங்காய் மாலையும், அணிவதில்லை? ஏன் வளையல்களை அணிவதில்லை? இதையெல்லாம் நீங்கள் ஏன் கேட்கவில்லை?
இதற்கெல்லாம் என்ன பதில். பெண்களின் உடலமைப்புக்கு ஏற்ற உடைகளை அவர்கள் அணிகிறார்கள். ஆண்கள் அவர்களது உடலமைப்புக்கு ஏற்ற உடைகளை அணிகிறர்கள். இதில் ஏன் இதையெல்லாம் அணியக்கூடாது என்று கேட்பதைப் போலத்தான் உங்கள் கேள்வியும்.
ஆரம்ப காலத்திலிருந்தே பொன்னும், மணிகளும், நவரத்தினங்களையும் பெண்ணுக்கு அணிவித்துதான் அழகு பார்த்தனர். பெண்கள் ஆபரணங்களை அணிவதில் விருப்பம் உள்ளவர்கள் என்பதால், தாலியை பெண்கள் அணிவது வழக்கமாக வந்தது. ஆகஏன் ஆண்கள் சேலை அணிவதில்லை என்பதற்கு என்ன பதிலோ அதுதான், ஏன் ஆண்கள் தாலி அணிவதில்லை என்பதற்கும் பதில்.
அடுத்து ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு என்பது உங்கள் வாதம். ஆணாதிக்கம் எந்த யுகத்தில் இருக்கிறீர்கள் நீங்கள்? இன்று பள்ளிக்கூடங்களில் அதிக மதிப்பெண் வாங்கி ஆண்களை விட பெண்கள்தான் அதிக அளவில் பொறியாளர்களாகவும், மருத்துவர்களாகவும் உருவாகி வருகிறார்கள். தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி மிக உயர்ந்த பதவிகளில் அமர்ந்து இருப்பவர்களும் பெண்கள் தான். கணிணி யுகத்தில் பெண்களின் கீழ் எண்ணற்ற ஆண்கள் பணிபுரிகிறார்கள். இதைவிட சின்னஞ்சிறு கிராமம் முதல் பெருநகரம் வரை குடும்பத்தில் எடுக்கப்படுகிற முடிவுகள் பெண்களைக் கலந்துதான் எடுக்கப்படுகிறது. ஆணாதிக்கம் இது சென்ற நூற்றண்டின் ஆரம்பத்தில் உபயோகிக்கப் பட்ட சொல். 21ம் நூற்றாண்டுக்கு வாருங்கள்.
என்று ஒரு குழந்தை பிறந்து அதுவும் பெண்ணாக இருந்து, ஒரு குழந்தையாக இருந்தாலும் பெண்ணே போதும் என்று முடிவு செய்தார்களோ அப்பொழுதே ஆணாதிக்கம் என்கிற சொல்லும் மறைந்துவிட்டது. நீங்கள் சொல்வதெல்லாம் எத்தனை பெண் பிறந்தாலும் ஆண்பிள்ளை வேண்டும் எண்ணிய காலம். பாரதி சொன்னதைப் போல ”வீட்டுக்குள்ளே பெண்ணை பூட்டி வைப்போம் என்ற விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்’’ இப்படி பெண்கள் நிலை இருந்த காலம். இன்று பெண்கள் கால் சென்டருக்கு வேலைக்குச் சென்றுவிட்டு இரவு இரண்டு மணிக்கு வீடு திரும்பிக்கொண்டிருக்கிற நிலையில் இருக்கிறார்கள்.
உலகநாடுகள் இன்று பெண்களின் தலைமையை ஏற்றுக்கொண்டு விட்டது. அமெரிக்காவில் ஒபாமாவை எதிர்த்து போட்டியிட்ட ஹிலாரி முதல் இந்தியாவில் பிரதமர் இருந்தபோதும் அவரை வழி நடத்துகிற பெண் சோனியாகாந்தி உள்பட நிறைய நாடுகள் பெண்களின் தலைமையின் கீழ் செயல்படுகிறது. விளையாட்டுத் துறையிலும் பெண்கள் சாதித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆணாதிக்கம் அம்பேலாகி அனேக நாட்களாகி விட்டது.
தாலியின் மகிமையைப் பற்றி சொல்லியாக வேண்டும் என்கிறீர்கள். சரி சொல்கிறேன். அந்தக் காலத்தில் மக்கள் கூட்டங் கூட்டமாக வாழ்ந்தார்கள். அப்படி வாழ்ந்த போது ஒவ்வொரு கூட்டத்திற்கும் ஒரு சில கட்டுப்பாடுகளை, விதிமுறைகளை ஏற்படுத்திக் கொண்டார்கள். இன்றும் கிராமங்களில் கட்டுப்பாடுகள் உள்ளது. ஒரு சில கிராமங்களில் செருப்பு அணிவதில்லை. ஒரு சில கிராமங்களில் புகை பிடிப்பதில்லை. ஒரு சில ஊர்களில் மது அருந்தக் கூடாது. இப்படி விதிமுறைகளை விதித்துக்கொண்ட மக்கள் உண்டு. அந்த வகையில் இந்துக்கள் என்கிற ஒரு சாரார் தங்களது கட்டுப்பாடுகளில் ஒன்றாக ஒரு பெண்ணும், ஒரு ஆணும் திருமணம் என்கிற ஒப்பந்தத்தின் மூலம் இணைகிற பொழுது தங்களது சொந்தங்களின் முன்பாக உறுதிமொழி எடுத்துக்கொள்கிறார்கள். இப்பொழுதுதான் பதிவு அலுவலகங்கள் வந்திருக்கிறது. பதிவாளர் முன்பு இருவரும் சம்மதத்தோடு கையொப்பம் இட்டு திருமணத்தை பதிவு செய்கிறோம். அதைப்போல சொந்த பந்தங்களின் முன்பாக, ஆண், நான் இந்தப் பெண்ணை முழு மனதோடு ஏற்றுக்கொண்டு, இவரை எனது வாழ்நாள் முழுவதும் ஏற்படும் இன்ப துன்பங்களை பங்கிட்டு, இறுதிவரை காப்பேன் என்றும், பெண்ணும் எனக்கு இவரை பிடித்திருக்கிறது. இவரது துன்பத்தை எங்களது துன்பமாகவும், இது போல ஒவ்வொன்றையும் நான், நீ என்று இருந்தவர்கள் நாங்கள் என்றாகிறோம். என்பதை ஆண் ஒப்புக்கொண்டு அதன் அடையாளமாக பெண்ணின் கழுத்தில் இந்துக்கள் உருவாக்கிக்கொண்ட விதிப்படி தாலி என்ற ஒன்றை கட்டுகிறான். பெண்ணும் தன்னுடைய முழு சம்மதத்தோடு ஏற்றுக்கொள்கிறார். இந்துக்கள் தாலி கட்டுகிறார்கள்.
மற்றொரு பகுதியில் ஒரு கூட்டம் வசித்து வந்தது. அவர்கள் தங்களது திருமண ஒப்பந்தமாக மணமக்கள் இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்டார்கள். இவர்கள் கிறித்தவர்கள் . அப்படியென்றால் கிறித்தவர்களில் ஆணாதிக்கம் கிடையாது என்பதா உங்கள் வாதம்? பெண்களை கட்டாயப்படுத்தி நான்குபேர் இறுகப்பிடித்துக் கொண்டு தாலியை கட்டுவது போல் கூறுகிறீர்கள். நீங்கள் சொல்வது அப்படித்தான் இருக்கிறது. விரும்பி இருவரின் சம்மத்தோடு கட்டப்படுவது தாலி. தாலி ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு அதனால் தாலி கட்டிக்கொள்ள மாட்டோம் என்று எத்தனை பெண்கள் கழற்றியிருக்கிறார்கள். எத்தனை பேர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார்கள்? எத்தனையோ ஆபரணங்கள் இருக்கும்போதும் அனைத்தையும் திருமணத்தின் போது கட்டுவதில்லை. உனக்கு நான், எனக்கு நீ, என்ற முடிவெடுத்து தாலியை மட்டுமே கட்டுகிறார்கள்.அதனால் தான் அது முக்கியத்துவம் பெறுகிறது. இப்படி நீட்டிக்கொண்டே செல்லலாம் பதிலை காலத்தின் அருமை கருதி முடிக்கிறேன். நன்றி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக