அரசியல் களம்

வைகைநதி
வறண்டு கிடக்கிறது...
வருத்தமில்லை...

அனைத்து கட்சிகளுக்கும்
பொதுக்கூட்டம் நடத்த
பொருத்தமான
மைதானம் கிடைத்ததில்
மட்டற்ற மகிழ்ச்சி...

கண்ணில்
நீரோடு
காத்திருக்கிறான்
விவசாயி...

குழந்தைகளுக்காக...

உலகிலேயே மிகவும் கடினமான செயல், ஆழ்கடலின் ஆழத்தை கண்டுபிடிப்பதோ அல்லது மிகப்பெரிய மலையைப் பெயர்த்தெடுப்பதோ அல்ல. ஏனென்றால் இதற்கெல்லாம் நவீனக் கருவிகள் வந்துவிட்டது. இவை எல்லாவற்றை விட மிகப் பெரிய செயல் பள்ளிப் படிப்பை வெற்றிகரமாக முடித்து சாதனை படைத்த மாணக்கராய் வெளிவருவதுதான். இதே போல் இன்றைய பெற்றோர்களின் நிலையும் மிகச்சிரமம்தான். நான் கடந்த வாரம் ஒரு திருமணத்திற்குச் சென்றிருந்த பொழுது எனக்குப் பின் இருக்கையில் அமர்ந்திருந்தவர் பேசிய பேச்சு என் காதுகளில் விழுந்தது. அவர் தன் அருகில் அமர்ந்திருந்தவரிடம் சொல்லிக்கொண்டிருந்தார். என்னுடைய மகனிடம் படி என்று மட்டும் சொல்லிவிட்டால் போதும் ஒரு விரோதியைப் பார்ப்பது போல என்னைப் பார்க்கிறான் என்று. இந்த வார்த்தைகள் என்னை மிகவும் யோசிக்க வைத்தது. வளர்ந்து வரும் பிள்ளைகளிடம் ஒரு குறிப்பிட்ட அளவுக்கும் மேல் படி என்று சொல்ல முடியவில்லை. இதையே அடிக்கடி சொல்லி, நம் மீது பிள்ளைகளுக்கு வெறுப்பு வந்து விடுமோ? என்ற பயம் நம் நெஞ்சுக்குள் எட்டிப் பார்க்கிறது. அதே சமயம் சிறிது நேரம் அன்பாகப் பேசினாலும், போதும் இதற்கு மேல் இவர்களிடம் பேசினால் நம்மிடம் பயம் போய்விடும், அப்புறம் நாம் சொல்வதைக் கேட்கமாட்டார்கள் என்கிற எண்ணம் மனதிற்குள் வந்துவிடுகிறது. இப்படி பள்ளிப் படிப்பினால் அதிகம் பாதிப்படைவது பெற்றோர்களா? பிள்ளைகளா? என்று பட்டிமன்றம் நடத்தினால் தீர்ப்பு சொல்வது சிரமம்தான். இன்றைய இந்தியாவில் இளைஞர்கள் முதல் அனைத்து தரப்பு மக்களும் விரும்பிப் பார்க்கும் விளையாட்டு கிரிக்கெட். இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் கடவுள் என்று வர்ணிக்கப் படுபவர் சச்சின் டெண்டுல்கர். எண்ணற்ற உலக சாதனைகளைப் படைத்தவர். ஏன் நேற்று குவாலியரில் நடந்த ஒரு நாள் போட்டியில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக இரட்டை சதம் அடித்தது கிரிக்கெட் விளையாட்டின் பிதாமகனாக அவரை உயர்த்தியுள்ளது. 1971ம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் போட்டி அறிமுகமானது முதல் 2010 பிப்ரவரி 23ம் தேதி வரை உலகில் எந்த ஒரு கிரிக்கெட் வீரரும் இதுவரை இச்சாதனையைத் தொடவில்லை. தெண்டுல்கர் இதையும் செய்து இந்தியனின் பெருமையை உலகத்திற்கு உணர்த்தியுள்ளார். இத்தகு சிறப்பு மிக்க தெண்டுல்கருக்கே அவரது மனதை ஒருமுகப்படுத்த மனோதத்துவ நிபுணரின் அறிவுரைகள் அவ்வப்போது தேவைப்படுகிறது என்றால் நமது குழந்தைகளின் மனதை அறிந்து ஆலோசனை சொல்ல ஒரு ம்னோதத்துவ நிபுணர் தேவையா? இல்லையா? அந்த நிபுணர் யார்? பெற்றோர்களாகிய நாம் தான். பிள்ளைகளை ஊக்குவிக்கும் உன்னதப் பணி நமக்கு இருக்கிறது. ஆயிரம் வேலைகள் நமக்கு இருக்கலாம் நிற்காமல் ஓடி ஓடி உழைப்பதெல்லாம் எதற்காக? குழந்தைகளின் எதிர்காலத்திற்காக. எதிர்காலத்திற்காக உழைக்கும் நாம் நிகழ்காலத்தை நினைக்க மறுக்கிறோம். தினமும் சிறிது நேரத்தை குழந்தைகளுக்காக ஒதுக்குவோம். உன்னால் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை அவர்களுக்குள் விதைப்போம். விண்ணிலும் மண்ணிலும் விஞ்ச முடியாதது எதுவும் இல்லை என்பதை எடுத்துரைப்போம்.