பதிலுரை

அப்பாவி அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

கடவுள் உண்டா? இல்லையா? என்பது என் வாதமல்ல. கடவுள் உண்டு என்பது அவர்களின் நம்பிக்கை. கடவுள் இல்லை என்பது மறுப்பவர்களின் நம்பிக்கை. இது உலகம் தோன்றிய நாள் முதல் எழுந்து நிற்கும் வினா. இதற்கு உள்ளே செல்ல நான் விரும்பவில்லை.

இயல்பு வாழ்க்கை என்று ஒன்று உண்டு. மனிதன் பாதையில் நடந்து செல்கிறபோது கால்களால் நடப்பதே நடைமுறை. இதை விடுத்து இயல்பாய் நடக்கிறபோதும், மாடிப்படிகளில் ஏறுகிறபோதும் தலைகீழாய் கைகளை தரையில் ஊன்றி நடந்து செல்வது இயல்பானதா? நடைமுறையில் இதுதான் உள்ளதா?

நீங்கள் சொல்கிறபடி கடவுள்களின் வாழ்க்கையும்,பண்டைய கால பண்பாட்டையும் நாம் பார்த்திருக்கிறோமா? ஏதோ ஏடுகளில் இருக்கிற வரிகளையும் அதுவும் உண்மையாக சொல்லப்போனால் செப்பேடுகளில் இருந்ததைக் கொண்டுதான் அன்றைய வாழ்க்கை முறையைக் கூறிக்கொண்டு இருக்கிறோம். கடவுள் மட்டுமல்ல அன்று மனிதன் கூட எப்படி வாழ்ந்தான் என்று கூறுவதெல்லாம் கற்பனை கலந்த கலவை.

ராஜராஜசோழன் கட்டிய தஞ்சை பெரிய கோயிலை நம்மால் இன்றும் பார்க்க முடிகிறது. எனினும் அவனுடைய வாழ்க்கை முறையையும், அவன் அக்கோயிலை கட்டிய முறையையும் இதைப் போல நிச்சயமாக சொல்லமுடியுமா? ஏடுகள் சொல்கிறது என்று நீங்கள் சொல்லக் கூடும் அவை அப்படியே உண்மையா?

இன்று இருக்கிற ஒரு கவிஞர், ஒரு ஆட்சியாளரைப் பார்த்து எழுதுகிறார் “வாழும் வள்ளுவர் ‘’ என்று புகழ்கிறார். இன்னும் இருநூறு ஆண்டுகள் போன பின்பு இதை உலகம் எப்படிக் கூறும் என்று நினைக்கிறீர்கள்?. முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு இரண்டாவது வள்ளுவர் வாழ்ந்தார் என்றுதான் கூறும். ஏடுகளில் புலவர்கள் எழுதும்போது மிகைப்படுத்திக் கூறியிருக்கிறார்கள். அதனைவிட அந்தச் செய்யுள் வரிகளுக்கு விளக்கவுரை தருகிறவர்கள் தங்களுக்குத் தெரிந்த புலமைகளை உள்ளே புகுத்தி, தங்கள் விருப்பத்திற்கேற்றவாறு விளக்குகிறார்கள்.

ஏன் இவைகளை எழுதுகிறேன் என்றால் சென்ற நூற்றாண்டைப் பற்றி நமக்குத் தெரியும். நமது முன்னோர்கள் வாய்வழியாகச் சொல்வதைக் கேட்டிருக்கிறோம். இதை சிறிது நம்பலாம். உலகம் தோன்றியது முதல் என்ன நடந்தது என்று கூறுவதில் எவ்வளவு உண்மை உள்ளது என்பது எவருக்கும் தெரியாது.


நான் தலைமை தாங்கிய ஒரு இலக்கிய நிகழ்ச்சியில், தமிழகத்தின் மிகப்பெரிய பேச்சாளர் ஒருவர் இலக்கிய சொற்பொழிவாற்றினார். அவர் சொன்னார் புற்றுநோய்க்கு மருந்து பாம்பின் விசத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாம்பு - புற்று பாம்பு-புற்று பாம்பிற்கும் புற்றுக்கும் சம்பந்தம் உள்ளது என்பதை கண்டுபிடிக்க 21 நூற்றாண்டுகளாகிவிட்டது என்றார். அரங்கம் அதிர கைதட்டுகள் கிடைத்தது. ஆனால் உண்மை என்ன? இதற்கு புற்றுநோய் என்று பெயரிட்டு எத்தனை ஆண்டுகள் ஆகியிருக்கிறது? இதை அவர் சொல்லவில்லை. இன்று தமிழை வியாபாரமாக பயன்படுத்துகிறவர்கள்தான் அதிகம் காணப்படுகிறார்கள். தமிழை வளர்ப்பதாகச் சொல்லிக்கொண்டே தங்கள் வருமானத்தை வளர்ப்பவர்கள் இவர்கள்.


தமிழைப்ப்ற்றி இன்னுமொருமுறை தனியாய்ப் பேசுவோம். இன்றைய நடைமுறையில் மக்கள் பழக்க வழக்கங்களைத்தான் நாகரீகம் என்கிறோம். இந்து மதமாக இருந்தாலும் சரி, எம்மதமாக இருந்தாலும் நமது பாரத தேசத்தைப் பொறுத்தவரை குறிப்பாக தமிழ்நாட்டில் வாழ்க்கைமுறை, மக்களின் சுயகட்டுப்பாடு, ஒழுக்கம், ஒரே மாதிரிதான் உள்ளது. ஒழுக்கம் தவறி நிற்பவர்களை நான் எடுத்துக் கொள்ளவில்லை. என்னைப் பொறுத்தவரை கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் குருவாகக் கருதுகிற மடாதிபதிகளானாலும் கடவுள் நம்பிக்கை இல்லை என்கிறவர்களின் குருவாக இருந்தாலும் தாலிக்கு அருகில் குப்பைகளைக் கோர்த்துக் கொள்ளாதீர்கள் என்பது தான் வாசகம். இன்றைய காலச் சூழ்நிலைக்கான வரிகள் இவை. மதங்களுக்கான வாசகம் அல்ல. மக்களின் வாழ்க்கைக்கான வாசகம்.



2 கருத்துகள்:

Unknown சொன்னது…

கற்பனை உலகில் கைகளை ஊன்றி தலைகீழாய் நடக்கும் ரேகா ரவி அவர்களே!

அப்பாவியின் ஐயங்களுக்கு கருத்துரைத்தமைக்கு நன்றி!

கருத்துரை என்ற பேரில் நேரடியாக விளக்கமளிக்காமல் முதுகைக் காட்டி இது முகம் தான் எனக்கூறி மூக்கைத் தொட்ட கதையாய் இந்துமதப் பண்பாடு பற்றி உலகம் அதிசயிக்கிறது என்று கதையளந்துவிட்டு அதற்கு வக்காலத்துக்கு முழுமுதற் கடவுளென்றும் உமையொருபாகன் அர்த்தநாரீஸ்வரன் என்றும் கடவுளாகக் கருதப்படும் ஈஸ்வரன் என்பவனை இழுத்துவந்து நிறுத்திவிட்டு நான் அந்த வாதத்தை முன்வைக்கவில்லை என்று கூறுகிறீர்களே இது என்ன நேர்மை.

இயல்பு வாழ்க்கை என்றால் என்ன? இன்று இருப்பது இயல்பு வாழ்க்கையா? என்ற கேள்விகளை எழுப்பிவிட்டு, அதற்கு இயற்கையை விடையளிக்கச் சொன்னால் விலங்கோடு ஒட்டித் திரிந்த மனித வாழ்க்கை, விலங்காகவே வாழ்ந்த மனித வாழ்க்கைதான் இயல்பு வாழ்க்கை என்கிறது இயற்கை.

அந்த விலங்கு வாழ்க்கையில் இருந்து விடுபட்டு விலங்கிலிருந்து வேறுபட்டுவிட்ட தொடர்ச்சியாகப் பண்படுத்தப்பட்ட வாழ்க்கையின் செயற்கையான நடைமுறைகளின் செழுமைதானே பண்பாடு. இந்தப் பண்பாடுதானே இன்றைய மனிதனின் இயல்பு வாழ்க்கையில் வெளியில் தெரிகின்ற விளைச்சல்.

இந்த பண்பட்ட விளைச்சலில் பண்பாடாய் தெரிகிற செழுமையில் இயற்கையாய் இருக்கின்ற எந்த விலங்கு கைகளால் தலைகீழாக நடக்கிறது? பண்பட்டதாகச் சொல்லப்படுகின்ற எந்த மனிதன்தான் கைகளை ஊன்றி தலைகீழாய் நடக்கின்றான்? ஆக இயற்கையாய் இயல்பு வாழ்க்கை வாழ்கின்ற விலங்கும், பண்பட்ட செயற்கையில் வாழும் மனிதனும் செய்யாத ஒன்றை கைகளைத் தரையில் ஊன்றி தலைகீழாய் நடப்பதாய் கூறுகிறீர்களே எப்படி? இல்லாத ஒன்றை இருப்பதாய்க் கூறுவது உங்களின் கற்பனைதானே?

இதுபோன்ற கற்பனைக் கதைகளின் பின்புலத்திலுள்ள கடவுள்களை இழுத்துவந்து நிறுத்திவிட்டு செப்பேட்டுக் கதைகளைச் சொல்லி, ஏதோ செப்பேடுகளில் கூறியிருப்பதைப் போல வாழ்கிறோம் என்று எழுதிவிட்டு செப்பேடுகளே கற்பனைதான் என்று கூறுகிறீர்களே இது உங்களின் மீமிகைக் கற்பனையா?

நீங்கள் இன்றைய இருப்பு வாழ்க்கையில் இருந்து எட்ட முடியாத கற்பனைத் தொலைவில் வாழ்ந்து கொண்டு இருக்கிறீர்கள் என்பது தெரிகிறது. ஆக கற்பனையான தொலைவில் வாழ்பவரிடம் கட்டுப்பாட்டுக்குரிய வாழ்க்கை குறித்து கற்பனையான விளக்கங்களையல்லாமல் வேறு என்ன பெறமுடியும்?

இயல்பு வாழ்க்கையைக் கூறிவிட்டு செயற்கையாக அணிவிக்கப் படுகிற தாலியை எடுத்துக் கொண்டு, அதன் பின்னால் ஒளிந்து கொண்டு நிற்கின்ற ஆணாதிக்கத்தை மூடி மறைத்துவிட்டு ”தாலியை நெஞ்சில் சுமப்பதே பெண்ணுக்குப் பெருமை” என்றும் ”தாலி கணவனின் நினைவுகளையும், சுயகட்டுப்பாட்டையும் சுகமாகச் சுமக்கிற சூத்திரக்கயிறு” என்றும் ”இது புதிதல்ல, இதுவே நமது பண்பாடு” என்றும் கதையளந்துள்ளீர்களே நீங்கள் எதைத்தான் கூற வருகிறீர்கள். நீங்கள் எதைத்தான் இந்துமதப் பண்பாடு எனக் கூறுகிறீர்கள்?

உங்கள் இந்துமதப் பண்பாட்டில் பெண்களுக்குத் தாலி பெருமைக்குரியது என்றால், அது சுகமானச் சூத்திரக்கயிறு என்றால், அந்தப் பெருமைமிகு புனிதத்தையும் சுகமான சுமையான சூத்திரத்தையும் ஏன் உங்களைப் போன்ற ஆண்கள் சுமப்பதில்லை. பெண்கள் மட்டுமே சுமக்க வேண்டும் என்பது என்ன மனிதச் சமத்துவ இயல்பு வாழ்க்கைப் பண்பாடு? அப்படி என்னதான் அந்தக் கயிற்றில் சுகமான சூத்திரம் அடங்கியுள்ளது? அல்லது முடிச்சுப் போடப்படுகிறது?

இதையெல்லாம் விளக்கிவிட்டு,

தாலி அணிந்த ஒவ்வொரு பெண்ணும் தன் கணவனையே கடவுளாக நினைக்கிறாள் என்றால் அப்படி நினைப்பவள் கடவுளைப் பரப்புவதையே தன் வாழ்க்கையாக எடுத்துக்கொண்டு நீங்கள் பெருமைப்படுகிற இந்து மதத்தின் கடவுள்களின் தூதுவர்களாக இருக்கின்ற காவி உடை சாமியார்களை முத்திரை(டாலர்)களாக்கி அந்தப் புனிதக் கயிற்றில் அணிந்து கொள்வது என்னதான் குற்றம்? அப்படி என்ன அந்த மஞ்சள் கயிற்றின் மகிமைப் புனிதம் கெட்டுவிடப் போகிறது? என்பதை எதிர்த்து விளக்கமளியுங்கள்.

நீங்கள் கற்பனையென கருதுகின்ற இந்துமதக் கடவுள் பண்பாட்டை எடுத்து விளக்கித் தெளிவாக்கிவிட்டு அதில் தாலிக்கிருக்கும் பெருமையைப் பற்றித் தம்பட்டம் அடித்துக் கொள்ளுங்கள்.

கணவனை கடவுளாகக் கருதும் அந்த மஞ்சள் கயிற்றின் மகிமையை ஏன் ஆண் சுமக்கவில்லை என்பதை தெளிவாக்கிவிட்டு, உலகமே அதிசயிப்பதாய் நீங்கள் பீற்றிக் கொள்ளும் இந்துமதப் பண்பாட்டைப் பற்றி ஏராளமாக எழுதித் தள்ளுங்கள்.

(இந்துமதப் பண்பாட்டைப் பாதுகாப்பதில் பெண்களுக்கு உள்ள பங்கைப் பீற்றிக் கொள்ளும் நீங்கள் அதில் ஆண்களுக்குள்ள பங்கு என்ன என்பதைப் பற்றியும் அவசியம் எழுதுங்கள்)

இப்படிக்கு அன்புடன்
அப்பாவி பாமரன்

ragupathi சொன்னது…

¨Å¸¨È -ºÃ¢Â¡É «÷ò¾ò¨¾ ÒâóÐ ¦¸¡ñ§¼ý

ÃÌÀ¾¢